குழந்தைகள் உண்ணும் உணவில் விஷம் கலப்பு: தொடரும் குழப்பம்!

ஜேர்மனியிலுள்ள கிண்டர்கார்டன் பள்ளி ஒன்றில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவில் விஷம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், உணவு பரிமாறுபவர்கள் அதை கவனித்து விட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

Leverkusen நகரிலுள்ள கிண்டர்கார்டன் ஒன்றில் குழந்தைகளுக்கு வழங்கப்பட இருந்த உணவில் ஏதோ நச்சு வாசம் வீசுவதையறிந்த உணவு பரிமாறுபவர்கள் பொலிசாருக்கு தகவலளிக்க, விரைந்து வந்த பொலிசார் அந்த உணவு மாதிரிகளை கைப்பற்றி ஆய்வுக்காக அனுப்பினர்.

நல்ல வேளையாக உணவு பரிமாறுபவர்கள் அந்த உணவில் பிரச்சினை இருப்பதை கண்டுபிடித்துவிட்டதால் அதை குழந்தைகளுக்கு வழங்கவில்லை.

இன்னொரு பக்கம் அந்த உணவை தயாரித்தவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில் ஆய்வு முடிவுகள் வெளிவர, குழந்தைகள் விரும்பி உண்ணும் சாஸ் ஒன்றில் ஒரு டிடர்ஜெண்டும், குழந்தைகள் குடிக்கும் சூப்பில் பூச்சிக் கொல்லி மருந்து ஒன்றும் கலக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அந்த பூச்சிக்கொல்லி மருந்து, குழந்தைகள் பயிலும் அதே கிண்டர்கார்டனில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்து என்பது தெரியவந்துள்ளதையடுத்து, அந்த கிண்டர்கார்டனில் வேலை செய்யும் யாரோ ஒருவர்தான் இந்த நாச வேலையைச் செய்திருக்க வேண்டும் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

அத்துடன் வேண்டுமென்றே விஷம் வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கும் பொலிசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.